Monday, July 25, 2011

தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே : சாலமன் பாப்பையா தீர்ப்பு


தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு அச்சுத்துறைக்கே உள்ளது என சாலமன் பாப்பையா தீர்ப்பளித்தார். கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இன்று மாலை பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித்திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. இப்பட்டிமன்றத்தில் வாகை சந்திரசேகர், திண்டுக்கல் ஐ. லியோனி, நடிகர் எஸ்.வி. சேகர், திருப்பூர் கிருஷ்ணன், நக்கீரன் ஆர். கோபால் ஆகியோர் தத்தம் அணிகள் சார்பாக பேசினர். இறுதியில் பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, சாதாரண மக்களுக்கு எட்டாத கனியாக இருந்த தமிழ் இலக்கியத்தை நாடகத்துறையின் வாயிலாக பாமர மக்களும் அறியும் வண்ணம் கொண்டு சென்றது வெள்ளித்திரையே என்று குறிப்பிட்டார். தமிழ் இலக்கியங்களை வசனங்களாகவும், பாடல்களாகவும் சாதாரண மக்களுக்கு கொண்டு சென்றதில் வெள்ளித்திரைக்கு பெரும் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்திலுள்ள பல மொழி வழக்குகளை அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியதிலும் வெள்ளித்திரையின் பங்கு அபாரமானது என்று தெரிவித்த அவர், ஆனால் தற்போது வெள்ளித்திரையில் தமிழ் பண்பாடு குறைந்து வெளிநாட்டு பண்பாடே அதிகம் இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். அதனால் தற்போது வெள்ளித்திரை தற்போது வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சின்னத்திரை குறித்து அவர் குறிப்பிடுகையில், சின்னத்திரையில் தற்போது, உடற்பயிற்சி, அறஇலக்கியம், பக்தி இலக்கியம், சட்டம், கவி அரங்கம், சமையல் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், அதே போல் படத்திருட்டும் இருப்பதாக குறிப்பிட்டார். இவ்விஷயம் காரணமாக வெள்ளித்திரையை விட சற்றே மேம்பட்டது சின்னத்திரை என்று அவர் குறிப்பிட்டார். பின் அச்சுத்துறை குறித்து அவர் பேசுகையில், இன்று நாம் செம்மொழிக்கு விழா நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றதற்கு காரணம், நாம் தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து அவைத்திருப்பதே காரணம் என்று தெரிவித்தார். அவ்வாறு பாதுகாத்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், செம்மொழி பற்றி பேசிக்கொண்டு மட்டுமே இருந்திருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.மேலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை குறித்து விமர்சனம் தரும் தகுதி அச்சுத்துறைக்கே உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் ஜனநாயகத்தின் 4வது தூணாகவும் அச்சுத்துறை உள்ளதாக தெரிவித்த அவர், தற்போது அச்சுத்துறை இணையதளம் என்று வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, தமிழை வளர்க்கும் பெரும் மற்ற இரண்டு துறைகளை விட அச்சுத்துறைக்கே உள்ளது என்று பேராசிரியர் சாலமன் பாப்பையா தீர்ப்பு வழங்கினார்.

No comments:

Post a Comment